“பெண்களிடம் அடி வாங்கின ஆள் தானே நீ..” : அர்ச்சுனா - இளங்குமரன் இடையே வெடித்த வாக்குவாதம் -Video


யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.


வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோரிடையே  ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கட்சிகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்.


இந்நிலையில் குறித்த விவாதத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்தினார்.

 
ஆனால் ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது ஆழுமையற்றவராக காணப்பட்டார்.

இதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவரின் நிலையை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளரும் மாவட்ட அரச அதிபருமான பிரதீபன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், ரஜீவன், அர்ச்சுனா, பவானந்தராஜா, இளங்குமரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது,  நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்திக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும்,  பாதீட்டில் வடக்கிற்காக அறிவிக்கப்பட 5 ஆயிரம் மில்லியன் உத்தேச ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டம், குடி நீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம், சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்தக் கூட்டத்திற்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை.